CLIVE AVENUE
க்ளைவ் அவென்யு (ஆங்கிலம் )
அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் திரு. டி.எஸ். திருமூர்த்தி அவர்களின் முதல் படைப்பு, க்ளைவ் அவென்யு (clive avenue) எனும் இந்நாவல். தனக்கு மிகவும் பரிச்சியமான ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அழகாக எழுதியுள்ளார்.
சென்னையிலுள்ள க்ளைவ் அவென்யு எனும் இடத்தில் வசிக்கும் சுந்தரம் ஐயரின் ஒரே மகன் ராஜன். வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு முடிந்து இந்தியா திரும்பும் அவன், ஆறு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்ட பின், இங்கேயே வேலைதேடி நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்துடன் இருக்கிறான்.
டொமினிக் எனும் ப்ரென்ச் (French) குடும்பப்பெண் அவனது சிறுவயது தோழி. இருவரது வீடும் அருகருகில் இருந்ததனால் சுந்தரம் வீட்டுப் பெண்ணாகவே அவள் இருந்தாள். அவளுக்கு ஒரு ப்ரென்ச் இளைஞனுடனும், ராஜனுக்கு ஒரு உயர்தட்டு பிராமணப்பெண்ணுடனும் திருமண நிச்சயம் நடக்கின்றது.
பல்வேறு காரணங்களால் இவர்கள் இருவரது திருமணமும் தடைபடுகிறது. இந்நிலையில் டொமினிக்கிற்கு ஆறுதலாக ராஜன் இருக்க, அவன்மீதான காதல் அவளுக்கு புரியத்தொடங்குகிறது. ராஜனுக்கு வேறு பெண் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், கிறிஸ்துவப் பெண்ணான அவள் தன்னுடைய காதலைச் சொன்னாளா, பின் அது நிறைவடைந்ததா என்பது முடிவு.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் நாவல் படிக்கும் சுவையை ஏற்படுத்துகிறது. இந்திய, வெளிநாட்டு கலாச்சாரம், அதன் நவீன மாற்றம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. சென்னை நகரத்தைப் பற்றிய அரிய தகவல்கள் அழகாகச் சொல்லப்பட்டிருந்தாலும் நாவலின் வேகத்தைப் பாதிக்கிறது.
காதல், அதிரடி, சோகம் என அனைத்தும் கலந்த கதையைத் தேர்ந்தெடுத்த எழுத்தாளர், இன்னும் சற்று யோசித்து காட்சிகளையும் சம்பவங்களையும் கூட்டியிருக்கலாம். சிறுகதையாக எழுத வேண்டியதை நாவலாக இழுத்த எண்ணம் மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
பெங்குயின் வெளியீடு
விலை : 275 ரூ
0 Comments:
Post a Comment
<< Home