நான் படித்த புத்தகங்களைப் பற்றி......

my opinion about the various tamil and english novels i read so far

My Photo
Name:
Location: Madurai, Tamil Nadu, India

Tuesday, May 09, 2006

பொய்த்தேவு (க.நா.சு)

திரு. க.நா. சுப்ரமண்யம் (1912-1988) பற்றிப் பலர் அறிந்திருப்பீர்கள். தயவு தாட்சண்யமில்லாத கண்டிப்பான விமர்சனங்களுக்கென்றே பெயர் பெற்றவர் க.நா.சு. தினமணியில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்த இவர், அசுரகணம், பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களையும் எழுதியுள்ளார். 1979 இல் குமாரன் ஆசான் நினைவு விருதும், 1986 இல் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். பொய்த் தேவு, இவரது பிரபலமான நாவல்களில் ஒன்றாகும்.

“பொய்த் தேவு”- தேவு என்றால் என்ன? தலைப்பை முதலில் ஆராய்வோம். மனிதனின் மனதில் எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும், இலட்சியங்களும் அடங்கி இருக்கின்றன. உருப்பெறாத, ஒரு வடிவமில்லாத இவைகளையே தெய்வங்கள் எனக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். ஆசைகளும் கனவுகளும் நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியவை. ஒரு நிமிடத்தில் ஒரு பொருளை தெய்வமாக நினைக்கும் மனிதன், மற்றொரு நிமிடத்தில் வேறொரு பொருளை தெய்வமாக நினைக்கிறான். இந்த விநாடியில் தெய்வமாக நினைத்த ஒன்று அடுத்த விநாடி பொய்த்து விடுகின்றது. பொய்த் தேவாக( தெய்வமாக) மாறிவிடுகின்றது. இதையே இத்தலைப்பு உணர்த்துகின்றது.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சாத்தனூர் எனும் கிராமத்தில், ஒரு ரெளடிக்கு மகனாய் பிறக்கும் சோமு, சோமசுந்தர முதலியாராக மாறிப் பின் சோமுப் பண்டாரமாக உயிர்விடும் வாழ்க்கைப் பயணத்தைக் கூறுவதே பொய்த் தேவு நாவலாகும். பணத்தை தெய்வமாக நினைக்கும் சோமுவின் வாழ்வும் மனமும் பாண்டுரங்கனை தெய்வமாக நினைக்கும் சாம்பமூர்த்தியின் வாழ்விலிருந்து எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றது என்பதைச் சம்பவங்களால் தெளிவாக உணர்த்துகின்றார் ஆசிரியர்.

சோமுவின் வாழ்க்கை மூன்று பாகமாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில், சிறுவயது நிகழ்ச்சிகளை விவரிக்கும் பொழுது சோமுவை ஒருமையில் விழிக்கும் ஆசிரியர், இறுதி பாகத்தில், பணம் சேர்ந்தவுடன் சோமசுந்தர முதலியார் எனப் பன்மையில் விழிக்கிறார். இதன்மூலம் படிப்போருக்கும் அக்கதாபாத்திரத்தின் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார். மேலும் சோமுவின் முப்பதாண்டு கால வாழ்க்கை இடைவேளை விட்டு இருபதே பக்கங்களில் கடத்தியிருப்பதும் புதிது.

அக்காலத் தஞ்சை, கும்பகோணம், திருவையாறு குறித்தப் பல தகவல்களை இந்நாவல் மூலம் பெறமுடிகின்றது. உதாரணமாக, தஞ்சை-கும்பகோணத்திற்கு இடையே பேருந்து வசதி வரும் முன்னரே ரயில் வசதி வந்தது போன்றவை. ஆயினும் முதல் பாகத்தில் நம்முடைய பொறுமை அதிகமாகவே சோதிக்கப்படுகின்றது. காவேரிக் கரையிலிருந்து என்றொரு அத்தியாயம். இது காவேரி அன்னைக்கே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. காவேரியைப் பற்றி அறிந்தவர்கள் நேரே அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வது நல்லது.

ஆசிரியர் கட்டுரை எழுதுவதில் வல்லுநர் என்பதாலோ என்னவோ கட்டுரை எழுதும் பாணியிலேயே கதை சொல்லப்பட்டுருக்கின்றது. ஒரு மனிதனின் அறுபது வருட வாழ்வைச் சொல்ல இதுவே தகுந்த முறையென்றாலும் 10 வரிகளுக்கும் குறைவாகவே வசனங்கள் இடம் பெற்றிருப்பது அலுப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் ஆசிரியருக்குப் பெண்கள்மீது என்ன வருத்தமோ தெரியவில்லை, நாவலில் வரும் பெரும்பாலான பெண்கள் ( வள்ளியம்மை, பாப்பாத்தி அம்மாள், கோமள வள்ளி, கமலாம்பாள், பாலம்பாள்) பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்பவர்களாகவே வருகின்றனர். அக்காலப் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் அல்ல என்பதை உணர்த்த இத்தனைக் கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றதா?!

படிப்போருக்கு மறதி அதிகம் என்று நினைப்பில் ஒரே நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் விவரித்திருக்கிறார். நேரடியாக மூன்றாவது பாகத்திற்குப் போனாலும் கதையைத் தெளிவாக உணரலாம். எ.கா. சுப்ரமண்ய ஐயரின் மகனான நாராயணன் பாத்திரம் இருமுறை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், முன்னுரையிலேயே முழுக்கதையையும் சொல்லிவிடுவதால் அதைத் தவிர்த்து, நேரடியாக முதற்பகுதிக்குச் செல்வது நல்லது. படிப்போருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டு இருக்கிறார் ஆசிரியர்.

பதிப்பகம்: காலச்சுவடு
295 பக்கங்கள்
150 ரூ



1 Comments:

Blogger Unknown said...

க.நா.சு வைத்தேடி இங்கே வந்தேன் நல்ல அழகான குறிப்புகள், சுவையாக எழுதி இருக்கின்றீர்கள்

24 July, 2009 06:31  

Post a Comment

<< Home

Counter
Counter

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது