THE PELICAN BRIEF ( John Grisham )
திரு. ஜான் க்ரிஷாம் அவர்களின் மூன்றாவது படைப்பு, “"தி பெலிகன் பிரீஃப்". இவரது மற்ற படைப்புகளைப்போல இந்நாவலும் சட்டம் சார்ந்த ஒரு குற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரே இரவில் கொலை செய்யப்பட, கொலைக்கான நோக்கம் தெரியாது குழம்புகிறது அமெரிக்க உள்துறை உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ (FBI). இந்நிலையில்,
டார்பி ஷா என்ற சட்டக்கல்லூரி மாணவி, இக்கொலை குறித்து ஆய்வு செய்யத் தொடங்குகிறாள்.
இரு நீதிபதிகளில் கோட்பாடுகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், கூடிய விரைவில் வரக்கூடிய வழக்குகள் ஆகியவை
குறித்து ஆய்வு செய்து,
"பெலிகன் ப்ரீஃப்" என்ற கொலைக்கான நோக்கம் குறித்த ஆவணத்தை எழுதி முடிக்கிறாள். தன்னுடைய படைப்பின் மீது தனக்கே திருப்தி
இல்லையென்றாலும், தன் கல்லூரி பேராசிரியர் கலஹனின் வேண்டுகோளுக்கு இணங்கி அதை அவரிடம் கொடுக்கிறாள் டார்பி. கலஹன் அதை தன் நண்பர் மற்றும் எப்.பி. ஐ வழக்கறிஞர் வெர்ஹீக்கிடம் காண்பிக்க, எப்.பி.ஐ வெள்ளை மாளிகைக்கு செய்தி அனுப்ப, ஆவணம் கைமாறத் தொடங்குகிறது.
இந்நிலையில், கலஹன் மற்றும் வெர்ஹீக் கொல்லப்பட, டார்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறாள். இந்த இரண்டு கொலைகளால் டார்பி தனது ஆவணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதைப்பத்திரிக்கை நிருபரான க்ரே கிரான்தம் என்பவரிடம் ஒப்படைக்கிறாள். மர்மநபர்கள் பின் தொடர, "பெலிகன் ப்ரீஃப்" ஆவணத்தின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முற்படுகின்றனர் இருவரும்.
நாவலின் முக்கிய பாத்திரங்கள் "பெலிகன் ப்ரீஃப்" ஆவணத்தைப் படித்து கொலையாளியை அறிந்திருந்தாலும், வாசகர்கள் கொலையாளியை அறிய, இறுதி வரை காக்க வேண்டியுள்ளது. இதுவே இந்நாவலின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். கொலையாளி யார் என்பது நாளிதழில் வெளிவந்த பின், பல்வேறு கதாபாத்திரங்களின் நிலையை ஆசிரியர் விரிவாக விளக்கியது, அழகான ஒரு நிறைவைத் தருகிறது.
கதைச் சூழலை ஆசிரியர் விரிவாக விளக்கியிருந்தாலும், அமெரிக்க அரசியல், உச்ச நீதிமன்றச் செயல்பாடுகள் குறித்த ஒரு அடிப்படை அறிவு வாசகர்களுக்கு அவசியமாகிறது. மர்ம நாவல்களுக்கு இருக்க வேண்டிய வேகம் இதில் குறைவென்றாலும், படித்த திருப்தி ஏற்படுவது உண்மை.
விலை : 400 ரூ
பக்கங்கள் : 370
வெளியீடு : 1993